Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மலையாள சினிமாவின் மகத்தான வித்தகன்! - ஃபஹத் ஃபாசில் தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட கதை

"ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்ப்பதுபோல சினிமா யதார்த்தமாகவும், உண்மைத்தன்மையுடனும் இருக்கவேண்டும்" - நடிப்பு அரக்கன் ஃபஹத் ஃபாசில் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஃபஹத் பாசிலிடம் சென்று 'ஃபிலிம் மேக்கிங் தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதுங்கள்' என்று சொன்னால், அதன் முதல் வரியில் அவர் எழுதும் முதல் வார்த்தை 'நேர்மை', இரண்டாவது வார்த்தை 'நம்பகத்தன்மை' என்றே இருக்கும். தன்னுடைய படத்தில் இவை இரண்டும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சமகால திரைக் கலைஞன் ஃபஹத் ஃபாசில்.

காதல், நகைச்சுவை, பீரியட் டிராமா, கேங்க்ஸ்டர் அல்லது த்ரில்லர்... இதில் எந்த வகைப் படங்களாக இருந்தாலும் ஃபகத் கேட்பது ஒன்றுதான்... அதுதான் நம்பகத்தன்மை. அதில் அவருடைய கேரக்டர் ஹீரோவோ, வில்லனோ அதைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை. யதார்த்தமாக உண்மைக்கு நெருங்கிய படைப்பாக இருக்கிறதா என்பதை மட்டுமே கவனிக்கக் கூடியவர். சொல்லப்போனால், இதுதான் அவருடைய வெற்றிக்கு அச்சாணி என தோன்றுகிறது.

image

அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான 'மாலிக்' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 'டேக் ஆஃப்' படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாகியிருக்கும் 'மாலிக்' எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றன, பல்வேறு தரப்பினரின் விமர்சனங்கள்.

தன்னுடைய மக்களுக்காக போராடும் தலைவன் 'சுலைமான் மாலிக்' கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில். இளமைப் பருவம் தொடங்கி முதுமை வரையிலான வெவ்வேறு வயதுக்கான உடல் தோற்றங்களை கச்சிதமாக ஏற்று நடித்திருக்கிறார். ஃபஹத்தை பொறுத்தவரை, இது அவரது கேரியரில் குறிப்பிடத்தகுந்த திரைப்படம். காரணம், இதுவரை அவர் தன்னுடைய உண்மையான வயதை விட கூடுதல் வயதான ஒரு காதாபாத்திரத்தில் நடித்ததில்லை.

Malik movie review: Fahadh Faasil is fabulous in Amazon's overambitious but outstanding crime saga - Hindustan Times

"இந்தத் திரைப்படம் ஒரு கதாபாத்திரத்தின் முப்பது ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது. இதில் நான் மட்டுமே வெவ்வெறு காலங்களை கடந்து நடிக்கவில்லை; எல்லா நடிகர்களும் அதைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த வளர்ச்சியை சித்தரிப்பது சவாலாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் என்னை நானே உந்தித்தள்ளினேன்" என்று 'மாலிக்' படம் குறித்து விவரிக்கிறார் ஃபஹத்.

ஃபஹத் பாசிலின் ஆரம்பகால சவால்கள்!

2002-ஆம் ஆண்டு அது. அப்போது அந்த இளைஞனுக்கு வெறும் 19 வயதுதான். தனது தந்தை ஃபாசில் இயக்கத்தில் 'கையெத்தும் தூரத்து ' (Kaiyethum Doorath) என்ற காதல் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார், அந்த இளம் நடிகர். அந்தப் படமும் வெளியானது. ஆனால், படுதோல்வி. எனவே, இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பொறியியல் படிக்க அமெரிக்கா கிளம்பினார் ஃபஹத். இருப்பினும் மனம், சினிமா பக்கமே இருக்க, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, நடிப்பு பட்டறைகளில் சேர்ந்து தன்னைப் பட்டைத் தீட்டிக்கொண்டார்.

சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து 2006-ல் 'கேரளா கஃபே' என்ற ஆந்த்தாலஜி படத்தின் மூலம் பெரிய திரையில் ஃபஹத்தை கண்டனர் மலையாள மக்கள். இந்தப் படத்தின் மூலம் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தார் ஃபஹத். தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டு சமீர் தாஹிர் இயக்கிய த்ரில்லர் படமான 'ச்சப்பா குரிஷு' படம் வெளியானது. 2011-ல் வெளிவந்த இந்தப் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்று, தன்னுடைய வளர்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தார் ஃபஹத்.

Fahadh Fazil: Lesser known facts

அவர் ஒன்றும் வறுமை பின்னணி கொண்ட, திரைப்பட வாசனையே இல்லாத குடும்ப பின்புலத்திலிருந்து வந்தவரில்லை. கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை 1980-ஆம் ஆண்டு வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான ஃபாசில். ஆனால், ஒருபோதும் ஃபகத் தனது தந்தையின் பின்புலத்தை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியது இல்லை. ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும், வழக்கமான கதைகள், வெகுஜன மக்களை எளிதில் சென்றடையக்கூடிய திரைக்கதைகளை நாடாமல், ஒவ்வொரு படைப்புகளிலுமே சோதனை முயற்சிகளையே செய்துபார்த்தார். அதுதான் அவரை மற்ற நடிகர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.

இதற்கு சிறந்த உதராணம், கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'ட்வென்டி டூ ஃபீமேல் கோட்டயம்' (22 Female Kottayam) திரைப்படம். தன்னை தொடர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கிய கணவரின் பிறப்புறுப்புகளைத் துண்டித்த பெண் குறித்த படம் அது. அதில், ஃபஹத் நடித்திருக்கும் கதாபாத்திரத்தை மற்ற எந்த வளர்ந்து வரும் நடிகரும் ஏற்று நடிக்கத் துணியமாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகருக்கு இது தேவையில்லாத வேலை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் சோதனை முயற்சியாகவே செய்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

Film Review: 22 Female Kottayam Is More Violence And Less Justice

வழக்கத்திற்கும் மாறான கதை தேர்வுதான் ஃபஹத்தை செதுக்கியது. "என்னைப் பொறுத்தவரை, மிக முக்கியமானது கதையும், அதை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் நுட்பங்களும்தான். உண்மையில் கதாபாத்திரம் என்பது படத்தில் கூடுதலாக ஓர் அடுக்கை மட்டுமே உருவாக்குகிறது" என்று தன்னுடைய கதை தேர்வு குறித்து இப்படி குறிப்பிடுகிறார் ஃபகத்.

2013-ஆம் ஆண்டு ஃபஹத் கேரியரில் முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. காரணம், அந்த ஆண்டில் தொடர் வெற்றிகளைக் குவித்தார். 'அன்னயும் ரசூலும்' (Annayum Rasoolu, 'ஆமென்' (Amen), 'ஒரு இந்தியன் பிரணயக் கதா' (Oru Indian Pranaykadha) என அடுத்தடுத்து வெளியான படங்கள் வெற்றியை வாரிக் குவித்தன. அதே ஆண்டில் வெளியான 'நார்த் ட்வென்டி ஃபோர் காதம்' (North 24 Kaatham) படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார் ஃபஹத். 2013-ஆம் ஆண்டு எந்த அளவுக்கு இனிமையான ஆண்டாக இருந்ததோ, அந்த அளவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் அவருக்கு மோசமான ஆண்டுகளாக வரிசை கட்டி நின்றன. 2014-இல் வெளியான 'பெங்களூர் டேஸ்' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர் தோல்விகளைச் சந்தித்தார். இருந்தாலும் சரியவில்லை; துவண்டு விழவில்லை. தன் பாதையை மாற்றிக்கொள்ளவும் இல்லை.

image

திலீஷ் போத்தன் இயக்குநராக அறிமுகமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் தனது தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஃபஹத். இரண்டு ஆண்டுகள் தொடர் தோல்விகளுக்கும் சேர்ந்து வரவு வைக்க எண்ணிய அவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார். ஆம்... 2018-ஆம் ஆண்டு வெளியான 'ஞான் பிரகாஷன்' (Njan Prakashan) படம் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. 'ஹீ இஸ் பேக்!' என்று மீண்டும் ஃபஹத் பாசிலை கொண்டாடத் தொடங்கியது மலையான திரையுலகம். தங்கச் சங்கிலியின் திருட்டை மையமாகக் கொண்ட திலீப் போத்தனின் 'தொண்டிமுதலும் திரிக்‌ஷாக்‌ஷியும்' (Thondimuthalum Driksakshiyum) திரைப்படம் ஃபஹத்துக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான இந்திய அரசின் தேசிய விருதை பெற்று தந்தது.

மலையாள சினிமாவின் புதிய அலை வித்தகன்!

சமீபகாலமாக இந்திய அளவில் மலையாள சினிமா கொண்டாடப்பட்டு வருகிறது. மொழிகள், எல்லைகளை கடந்து மலையாள சினிமாவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. கேரள சினிமா உலகில் தோன்றிய இந்த மாற்றத்துக்கு காரணம், புதுப்புது இயக்குநர்கள், எழுத்தாளர்களின் வரவும் கூட. அப்படியான திறமை வாய்ந்த புது இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அங்கீகாரம் வழங்கியதில் குறிப்பிடத்தகுந்தவர் ஃபஹத். திலீஷ் போத்தன், மகேஷ் நாராயணன், ஜான் வர்கீஸ் மற்றும் எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் உள்ளிட்ட பல திறமையாளருக்கும் அச்சாணியாக இருந்தவர். 'நடிப்புடன் மட்டும் நிறுத்திக் கொள்பவன் சிறந்த கலைஞனாக விளங்க முடியாது' என்பதற்கு ஃபஹத் உதாரணம்.

2019-ஆம் ஆண்டில், மது.சி.நாராயணனின் 'கும்பலாங்கி நைட்ஸ்' மற்றும் தமிழில் வெளியான தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' ஆகிய திரைப்படங்கள் ஃபஹத் பாசிலை தேசிய அளவில் சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியது. அதேபோல, காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள உயிரினம்தான் தப்பி பிழைக்கும் என்பது விதி. அந்த வகையில், ஓடிடி தளங்களுக்கு மலையாள திரையுலகம் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு ஆதரவாக நின்றவர் ஃபஹத். ஓடிடி தளத்தில் 'சீ யூ ஸூன்', 'ஜோஜி' படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதோ இப்போது 'மாலிக்'. முதலில் இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா சூழலால் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்திற்கு விற்கப்பட்டது.

New to the Fahadh Faasil fan club? Here are our recommendations | The News Minute

"எல்லோரும் இப்போது இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் பார்க்கலாம். நான் வீட்டில் உட்கார்ந்து ஒரு ஸ்பானிஷ் தொடரைப் பார்க்க முடியும். இதேபோல், உலகின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் உள்ள ஒருவர், மலையாள திரைப்படங்களைப் பார்க்க முடியும்" என்கிறார் ஃபஹத் பாசில். இப்போது திரும்பி பார்க்கும்போது ஃபஹத்தின் ஓடிடி மீதான பார்வை சரியாகவே கணிக்கப்பட்டிருக்கிறது என கருதுகிறது மலையான திரையுலகம்.

மலையாளம், தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜூனுடன் இணைந்து தெலுங்கில் கால்பதிக்க இருக்கிறார் ஃபஹத். பாலிவுட்டுக்கு செல்லும் ஏன் தயங்குகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டால், "எனக்கு இந்தி பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாது என்பது என் தயக்கத்திற்கு காரணமல்ல. மாறாக, ஒரு காட்சியை மேம்படுத்துவதற்கு நான் மொழியிலும் சிந்திக்க வேண்டும்" என்கிறார். சினிமாவை அவர் அளவுக்கு யாரும் நேசிக்க முடியாது என்பது தெளிவு.

சினிமாவை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக அணுகுகிறார்கள். அந்த வகையில், ஃபஹத்தை பொறுத்தவரை சினிமா என்பது உண்மையான, நேர்மையான, நம்பகமான ஒரு கலைப்படைப்பு அவ்வளவுதான்.

Fahadh Faasil - Wikipedia

முன்னணி இயக்குநரும் தன் தந்தையுமான ஃபாசிலின் இயக்கத்தில் இளம் நடிகராக அறிமுகமான ஃபகத், தனது முதல் படம் படுதோல்வியைத் தழுவியதுடன், நடிப்பே வரவில்லை என்ற கிண்டலுக்கு ஆளானார். அதன் பிறகு, அவர் வெளிநாடு சென்று கற்றலில் கவனம் செலுத்தியது பலருக்கும் தெரியும். ஆனால், அவர் தாயகம் திரும்பிய பிறகு, உறுதுணைக் கதாபாத்திரம் முதல் கதையின் நாயகன் வரை ஒவ்வொரு காட்சியிலும் மகத்தான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அனைவரையும் மலைக்கவைத்தார். இந்த நடிப்பாற்றல் எங்கிருந்து வந்தது? எப்படிக் கற்றுக்கொண்டார்? யாரிடம் கற்றுக்கொண்டார்? - இப்படி வரிசையான கேள்விகள் அடுக்கப்பட்டபோது, அவற்றுக்கான பதில்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

இதற்கு ஃபகத் ஃபாசிலை சற்றே கூர்ந்து கவனித்தால் விடை கிடைக்கக் கூடும். இந்திய சினிமாவில் மட்டுமின்றி, சர்வதேச அரங்கிலும் புகழ்பெற்ற மகத்தான நடிகர் இர்ஃபான் கான் மறைந்தபோது, ஒரு நீண்ட இரங்கல் கடிதம் ஒன்றைத் தீட்டியிருந்தார் ஃபகத் ஃபாசில்.

എന്നെ നടനാക്കിയ ഇര്‍ഫാന്‍: ഫഹദ് ഫാസില്‍ എഴുതുന്നു

தன் வாழ்நாளில் நேரில் பார்த்திடாத இர்ஃபான் கான் மறைவு குறித்து அவர் எழுதும்போது, "கடந்த பத்து ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன்; நடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். நான் இர்ஃபான் கானை சந்தித்ததில்லை. நேரில் பார்த்தது கூட இல்லை.... எனது திரை வாழ்க்கைக்காக, இர்ஃபான் கானுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருந்தபோது, அவர் நடித்த படத்தை டிவிடி வழியில் பார்க்காமல் போயிருந்தால், அவர் என் வாழ்க்கையை மாற்றவில்லையென்றால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். நன்றி சார்" என்று இர்ஃபான் கான் மறைவுக்கு உருக்கத்துடன் கலங்கினார் ஃபகத்.

இப்போது ஓரளவு நமக்குப் பிடிபட்டிருக்கும், ஃபகத் ஃபாசில் தன்னை எப்படியெல்லாம் செதுக்கிக்கொள்கிறார் என்று!

- மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்