சிவகங்கையில் மோதிரத்தை விழுங்கிய குழந்தைக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் மோதிரத்தை அகற்றினர்.
சிவகங்கை மாவட்டம் சண்முகராஜா தெருவை சேர்ந்த ராம்பிரசாத் - நிரஞ்சனா தம்பதிகளின் இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தபோது, தன் கையில் வைத்திருந்த 1/2 சவரன் மோதிரத்தை விழுங்கியுள்ளது. குழந்தை வாந்தி எடுத்தும், உணவு உட்கொள்ள மறுத்ததை அடுத்தும் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு நுண் கதிர் படம் எடுத்துப் பார்த்ததில், உணவுக்குழாயின் மேல்பகுதியில், மோதிரம் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் பேராசிரியர் நாக சுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர் குழு குழந்தைக்கு எண்டாஸ்கோபி மூலம் மயக்க மருந்து செலுத்தி, மோதிரத்தை அகற்றினர். சிகிச்சைக்கு பின் குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவ குழுவிற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதியும் தன்னுடைய பாராட்டுதல்களை மருத்துவ குழுவினருக்கு தெரிவித்து கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்