தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை மோசடி செய்துவிட்டதாக ஹெச்.ராஜா மீது குற்றம்சாட்டிய, பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சந்திரன். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி தனக்கும், தனது குடும்பத்தாருக்கும், ஹெச்.ராஜா தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மாவட்ட தலைவரிடம் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.
அக்கடிதத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது, உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்ததாகவும், ஆனால் ஹெச்.ராஜா, தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக பாஜக நகர நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு கூறி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஹெச்.ராஜா, தன்னுடைய ஆதரவாளர்களை ஏவிவிட்டு, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்கு ஹெச்.ராஜாவும், அவருடைய ஆதரவாளர்களும்தான் பொறுப்பு என்று கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல், கட்சிப் பதவியில் இருப்பதற்கு அச்சமாக இருப்பதாக தெரிவித்து கட்சிப் பொறுப்பில் இருந்து தான் விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
பாஜகவினரிடையே இந்த கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜகவின் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கடந்த 26-ஆம் தேதி காரைக்குடி வருகை தந்தார். ஹெச்.ராஜாவின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வந்திருப்பதாக கட்சி நிர்வாகிகளிடைய பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் மாநில அமைப்பு செயலாளர் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வந்ததாக தெரிவித்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஹெச். ராஜா மீது புகார் அளித்த காரைக்குடி நகர தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல தலைவர் ஆகியோர் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜனால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்