ஒன்றியம் என்ற வார்த்தையின் நீட்சியாக தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழத் தொடங்கியிருக்கின்றன. இது இறையாண்மைக்கு எதிரானதா? இல்லை தமிழக மக்களின் உரிமையா?
தமிழ்நாட்டில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைத்துள்ள திமுக, தொடக்கம் முதலே சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியது, ஒன்றிய அரசு என்ற சொல்லாடல்தான். மத்திய அரசு என்ற அழைக்கப்பட்டு வந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை திமுகவினர் பயன்படுத்திவருவது விவாதத்தை உருவாக்கியது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதன் நீட்சியாக தமிழ்நாட்டுக்கென்று தனிக்கொடியை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் எழத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி வேண்டுமென்ற கோரிக்கை எழுவது இது முதல் முறை அல்ல.
1970-ஆம் ஆண்டு டெல்லியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தனிக்கொடி கோரிக்கையை முன்வைத்தார். அதேபோல், சி.பா.ஆதித்தனார், பழ.நெடுமாறன் ஆகியோரும் தமிழ்நாட்டின் கொடி குறித்து பேசியுள்ளனர். 2010-ஆம் ஆண்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் இறையாண்மை மாநாட்டிலும் தமிழருக்கான தனிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படியாக தனிக்கொடி கோரிக்கையின் பயணம் இருக்க, தனிக்கொடி என்பது தேசிய இனங்களின் உரிமை என்கிறார் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு.
தமிழர் இறையாண்மை என்றாலே அது பிரிவினைவாதம்தான் எனக்கூறியுள்ள மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாசன், தமிழகத்தின் அரசியல் களம் மாறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்துவந்த திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பாஜகவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதற்கான வெளிப்பாடுதான் இது எனவும் விளக்கமளித்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு சட்டப்பேரவை ஒப்புதல் அளித்தது போல், தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்கின்றனர் தமிழ் தேசியவாதிகள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்