Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நீட் தேர்வு: நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி மனு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொது நல வழக்கு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்தார்.

image

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக பாஜக தரப்பில் வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு தரப்பில், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீட் விவகாரத்தில் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என அறிவுறுத்தினர். வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஜூலை 5க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில், நீதிபதி குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில், மாணவர்கள் பிரச்னைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை எனவும், ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் ஆய்வு அறிக்கைகளை அரசிடமே அளிக்க உள்ளதால் இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி முறையிட்டார். அதனை ஏற்ற நீதிபதிகள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்