ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற பணி நியமனங்களில் அடுக்கடுக்கான முறைகேடு வெளிவரும் நிலையில், 870 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமுறையின் களஆய்வில் முறைகேடுகள் குறித்து புதிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தின் முக்கியமான அரசுத்துறை நிறுவனங்களில் ஒன்று ஆவின். அந்நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறி விசாரணையில் இறங்கியுள்ளது அரசு. தேனி, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் விதிகளை பின்பற்றாமலும் முறைகேடாகவும் மேலாளர் உள்பட 870 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஆவின் விதிமுறைப்படி, எழுத்துத் தேர்வு முடிந்து 15 நாட்கள் கழித்துதான் நேர்முகத்தேர்வு நடைபெற வேண்டும். அடுத்த 10 நாட்கள் கழித்துதான் நியமனம் செய்யவேண்டும். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அவசர அவசரமாக ஆவின் நிறுவனத்தில் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜுன் 15ஆம் தேதி வரை நடைபெற்ற பணி நியமனங்களில் இந்த முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, திருப்பூர் யூனியனில் துணை மேலாளர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டதை குறிப்பிடலாம். அப்பணிக்கு தேர்வானவர் எழுத்து தேர்வில் 29 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற நிலையில், நேர்முக குழு 31 மதிப்பெண்கள் அளித்து அவரை நியமனம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக குளறுபடிகளில் பல்வேறு உயரதிகாரிகளும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும் விரிவான விசாரணை நடத்தும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த பணி நியமனங்கள் அனைத்தையும் நிறுத்திவைத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்