Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் நாளை இந்தியாவிற்கு மிக முக்கிய நாள்: ஏன்?

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவில் ஜூலை 24-ஆம் தேதியை இந்திய குழுவினருக்கு மிக முக்கிய நாளாக, விளையாட்டு வல்லுநர்கள் பலரும் கருதுகின்றனர். காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

முந்தைய ஒலிம்பிக் சீசன்களை விட டோக்கியோ திருவிழாவில் இந்தியக் குழுவினரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு எகிறியுள்ளது. திறமை மிகுந்த 127 வீரர் வீராங்கனைகளுடன் சென்றுள்ள இந்தியக்குழு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பதக்கங்களை வசப்படுத்துவர் என்ற நம்பிக்கை ஒளி வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜூலை 24-ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.

image

காரணம் அன்றைய தினம் இந்தியாவின் முன்னனி ஒலிம்பிக் நட்சத்திரங்கள் பதக்கங்களை தீர்மானிக்கும் பல்வேறு போட்டிகளில் களமிறங்கவுள்ளனர். பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் மிரா பாய் சானு, வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் அட்டனு தாஸ் மற்றும் தீபிகா குமாரி, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சவ்ரப் திவாரி, அபிஷேக் வர்மா, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். இவர்களுக்குள்ள பொறுப்பும், இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் உச்சம்.

பதக்க வேட்டைக்கான முதல் நாளிலேயே களம் காணும் இவ்வீரர்-வீராங்கனைகள் வெற்றிகளை வசப்படுத்துவது இந்திய குழுவில் இருக்கும் மற்ற வீரர்கள் அனைவருக்கும் உந்து சக்தியை அதிகரிக்கும். வெற்றிகளுடன் தொடங்கினால் குழுவில் உள்ள மற்ற அனைத்து வீரர்களுக்கும் மன ரீதியான வலிமை அதிகரிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.

மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன் என 18 பிரிவுகளில் இந்திய அணி வரும் நாட்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ள ஆற்றல் ஒலிம்பிக்கில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பையும், அழுத்தத்தையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 2 பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் பலரும் கணித்துள்ளனர். ஜூலை 24-ஆம் தேதி இந்திய அணிக்கு இனிய தொடக்கமாக அமையுமா? காத்திருப்போம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்