Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“பெண்களை இழிவாக பேசும் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரா?” : ஓபிஎஸ் கண்டனம்

திண்டுக்கல் ஐ.லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த செயலை இந்த கருவியால் இவன் முடிக்க வல்லவன் என்பதை தெரிந்துகொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணான வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதையும் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து இருப்பது இந்த கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது.

பட்டிமன்ற பெயரில் பெண்களை இழிவாக பேசுவதையும் அரசியல் கட்சி தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரீகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்க தொடர்ந்து முயற்சி செய்வதையும் வாடிக்கையாக கொண்டவர் ஐ.லியோனி.

நகைச்சுவை என்றப்பெயரில் அரசியல் கட்சி தலைவர்களை அருவறுப்பாக விமர்சிக்கக்கூடியவர் லியோனி. இவரை இந்த பதவியில் நியமிப்பதன்மூலம் தவறான கருத்துக்கள் மாணவ மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்து பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்