தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் தடுப்பூசிகள் மீதமாகி வரும் நிலையில், அரசு மையங்கள் அனைத்தும் போதியளவு தடுப்பூசி கிடைக்காமல் திணறுகின்றன. இதன் பின்னணி என்ன, தனியார் மையங்களில் மட்டும் தடுப்பூசி மீதமாவது ஏன், இதை எப்படி சரிசெய்வது, தடுப்பூசி மீதமாவதை தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை, சில தரவுகளுடன் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தடுப்பூசி பற்றாக்குறை, இந்தியாவில் மறுபடியும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதற்கு முன்னரும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றாலும்கூட, அப்போதெல்லாம் ‘மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்யும்போதுதான் இப்படியான பற்றாக்குறை பிரச்னை அதிகமாக இருக்கிறது, மத்திய அரசு இவ்விவகாரத்தை கையில் எடுத்து பணியாற்றினால் சிக்கல் குறையும்’ என மாநில அரசுகள் கூறின. மாநில அரசின் தொடர்ச்சியான அந்த வலியுறுத்தலின்பேரில், ‘மத்திய அரசே நாடு முழுவது தடுப்பூசி கொள்முதல் மற்றும் விநியோகத்தை கையில் எடுக்கும்’ என்ற அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக, ‘புதிய தடுப்பூசி கொள்கை’யை அமலாக்கியது மத்திய அரசு. ஆனால் இப்போதும் தடுப்பூசி மீதான பற்றாக்குறை நீடித்துக்கொண்டே இருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, கடந்த ஜூன் 21ம் தேதியிலிருந்து தடுப்பூசிக்கான புதிய தடுப்பூசி கொள்கைகள் அமலுக்கு வந்தன. அந்த திட்டத்தின் அமலாக்கப்பட்டதை தொடர்ந்து, ‘அன்றாடம் குறைந்தது 1 கோடி பேருக்காவது இந்தியாவில் தடுப்பூசி போடப்படும்’ என்ற மத்திய அரசு தனக்கான இலக்கொன்றை நிர்ணயித்தது. ஆனால் இப்போதும் 40 - 50 லட்சத்தையொட்டியே அன்றாடம் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியை ஆராயும்போது, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில், பாதிக்கும் மேற்பட்ட தடுப்பூசி உபயோகிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருவேளை அவை முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டால், இந்த எண்ணிக்கை கணிசமாக நிச்சயம் உயரும் என சொல்லப்படுகிறது.
உதாரணத்துக்கு, கடந்த மே மாதத்தில், 4.9 லட்ச டோஸ் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், 1.36 லட்சம் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில், 23 ம் தேதி வரையிலான தகவலின்படி பார்க்கும்போது, 9 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசி பெறப்பட்டு, அவற்றில் 4.8 மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. மொத்தமாக பார்த்தால், 13.91 லட்ச தடுப்பூசிகள் பெறப்பட்டு, அவற்றில் 5.9 லட்ச தடுப்பூசிகள் மட்டுமே அந்த காலகட்டத்துக்குள் பயன்படுத்தப்பட்டிருந்திருக்கின்றன.
மே - ஜூனை போலவே ஜூலையிலும் நிலைமை இருக்கும் என கணிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து சர்ச்சைக்கும் மத்தியிலும், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு 71.5 லட்ச டோஸ் தடுப்பூசி தரப்பட திட்டமிட்டிருப்பதாகவும்; அவற்றில் 17.75 லட்ச டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு தர திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்த நிலையென நினைக்க வேண்டாம். மத்திய அரசு தெரிவித்த தகவலின்படி, இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளுக்கு தரப்பட்ட தடுப்பூசிகளில் வெறும் 7.8% தடுப்பூசிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்தளவுக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி குறைவாக பயன்படுத்தப்படும் நிலையிலும், 25% தடுப்பூசியை ஒவ்வொரு மாதமும் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்குகிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த முடிவு, தடுப்பூசி பற்றாக்குறையை அரசு மையங்களில் இன்னும் அதிகரிக்கும் என பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ’அடுத்த கொரோனா அலை வருவதற்குள், நம்மால் முடிந்தவரை அதிக மக்களை கொரோனாவுக்கு எதிராக மாற்ற வேண்டும். அதற்கு நாம் அவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனையில் இவ்வளவு சேமித்துவைப்பது சிக்கலை இன்னும் அதிகப்படுத்தும். தீர்வை நோக்கி நாம் செல்ல, முட்டுக்கட்டையாக அமையும்’ எனக்கூறுகின்றனர்.
தேசிய பொதுசுகாதார ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குநர் சுந்தரராமன், இதுபற்றி பத்திரிகையொன்றில் பேசுகையில், “அரசு மையங்களில்தான், தடுப்பூசிக்கான தேவை அதிகம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, மத்திய அரசு தனியார் மையங்களுக்கு அதிகம் ஒதுக்குவது ஏன்? தேவையிருப்போருக்கு ஒதுக்குவதுதானே சரியாக இருக்கும்...!
‘மாநிலங்களுக்கு என்ன அடிப்படையில் கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்கின்றீர்கள்’ எனக்கேட்டால், அவர்கள் சராசரியாக போடும் தடுப்பூசி விநியோகத்தை வைத்து தருகிறோம் என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்த விதி ஏன் தனியார் மருத்துவமனைகளுக்கு பொருந்தவில்லை என தெரியவில்லை” எனக்கூறியுள்ளார்.
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கினைப்பாளர் ஓ.பி.எஸ்., இவ்விவகாரம் பற்றி சில தினங்களுக்கு முன்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின் சிறப்பம்சமாக, இந்த பிரச்னைக்கு தீர்வொன்றை பகிர்ந்திருந்தார் அவர். அந்த விவரம் இங்கே...:
“தமிழகத்தில் அனைவருக்கும் இரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட, 16 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகின்றன. ஜூன் 26 நிலவரப்படி, ஒன்றரை கோடி தடுப்பூசிகள், அதாவது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆக, அரசுக்கு தடுப்பூசியின் தேவை அதிகமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, ஏற்கெனவே பல லட்ச தடுப்பூசியை உபயோகப்படுத்தப்படுத்தாமல் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு, அரசு இன்னும் 17.75 தடுப்பூசி வழங்க திட்டமிட்டிருக்கிறது. இப்படி செய்வதால், 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி, தனியார் மருத்துவமனையின் வசம் செல்லும். அங்கு மீண்டும் மீதமாகும் தடுப்பூசி அளவு அதிகமாகும்.
ஏற்கெனவே பெரும்பாலான மக்கள், அரசு மையங்களையே அதிகமாக நாடுகின்றனர். காரணம் அங்குதான் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், 850 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பணம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது. இதுதவிர, முன்பதிவு அவசியம் என்ற நிலையும் உள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இக்காரணங்களால், மக்கள் பலரும், அரசு மையங்களையே நாடுகின்றனர். இதன்விளைவாக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இன்னும் தேங்கும்.
ஆக, மேலும் மேலும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மீதமாகிக்கொண்டே இருக்கும். இதை தடுக்க, அரசு விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனொரு நடவடிக்கையாக, அம்மருந்துகளை அரசு பயன்படுத்திக்கொள்ள உரிய வழிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்படிசெய்தால், தமிழ்நாட்டின் தடுப்பூசி தேவை, விரைவில் பூர்த்தியாகக்கூடும்”
இவற்றை வைத்து பார்க்கும்போது, இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்த மத்திய அரசு இரண்டு விஷயங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அவை,
* தனியார் மருத்துவமனைகளில் மீதமாகும் தடுப்பூசிகளை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசு மையங்களுக்கு அனுப்புவதற்கான வழிகளை ஆலோசித்து, அதன்மீது நடவடிக்கை எடுப்பது.
இங்கு ஒரு சிக்கலும் இருக்கிறது. அது, தனியார் மருத்துவமனைகளில், கட்டணம் பெறப்பட்ட பின்னரே தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதால், அவற்றை திரும்ப பெற்றால், அதற்கான தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். அரசு, இதை கையாள்வதிலுள்ள சிக்கலும் அதுதான். ஆனால், அதற்காக தனியார் மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தாமலும் தடுப்பூசி இருந்துவிட்டு போகட்டும் என்று அரசு இருந்துவிட முடியாது. அப்படி இருந்தால், அது தடுப்பூசி பதுக்கல் என்றே பார்க்கப்படும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், இப்படி பல லட்ச தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்படாமல் பதுக்கப்படுவது, அடுத்தடுத்த கொரோனா அலைகளில் சிக்கலை அதிகமாக்கும்.
இந்த இடத்தில், மேற்கூறிய சிக்கல் உருவாகாமல் இருக்க, கூடுதல் நடவடிக்கையொன்றை அரசு முன்னெடுக்கலாம். அது,
* தனியார் மருத்துவமனைகளுக்கு, தேவை எந்தளவுக்கு இருக்கிறது - சராசரியாக ஒரு மருத்துவமனையில் எவ்வளவு தடுப்பூசி போடப்படுகிறது என்பதை அடிப்படையாக வைத்து, அடுத்த முறை அங்கு எவ்வளவு தடுப்பூசி போடப்படும் என்பதை கணித்து - அதற்கேற்ப தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவை இரண்டையும் அரசு செய்யும்பட்சத்தில், தடுப்பூசி மீதம் ஆவதை பெருமளவு குறைக்கவும், தடுக்கவும் முடியும். தற்போதைக்கு, இந்தியாவில் 34 கோடி தடுப்பூசிகள், போடப்பட்டுள்ளன. இது உடனடியாக அதிகமானால் மட்டுமே, அடுத்த அலை கொரோனாவின் தாக்கத்தை, நம்மால் தடுக்க முடியும்.
தகவல் உறுதுணை: TOI
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்