Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இரு மாற்றுத்திறனாளி மகள்களையும் பராமரிக்க உதவி தேவை: தாயின் வேதனை பகிர்வு

தனது இரு மாற்றுத்திறனாளி மகள்களையும் பராமரிக்க உதவி கேட்டு தாய் ஒருவர் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா. கூலி வேலை செய்து வரும் இவரது கணவர், குடிக்கு அடிமையாகி குடும்பத்தை விட்டு சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மஞ்சுளாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இரண்டு மகள்களும் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள். இவர்களை பராமரிக்க, நிதியுதவி தேவைப்படுவதாக கூறுகிறார் மஞ்சுளா.

இவர், இதற்கு முன்னர் காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பழம் வியாபாரம் செய்துவந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பேருந்து மோதி விபத்தொன்றை சந்தித்திருக்கிறார். அதன்பிறகு, மிகவும் உடல் நலிவுற்றதால் பழக் கூடைகளை சுமந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னரே கூலி தொழில் செய்துவந்துள்ளார்.

image

இந்நிலையில் மஞ்சுளாவின் இரண்டாவது மகளுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. நாள்போக்கில் அடிக்கடி ஏற்படும் பாதிப்பாக அது மாறியுள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் தன் மகளை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளிலேயே வசிக்க தொடங்கியிருக்கிறார்.

மாற்றுத்திறனாளியான முதல் மகளை, உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு இளைய மகள் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருக்கும் மஞ்சுளாவுக்கு, நாளொன்றுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கிடைப்பதாகவும் வருமானத்திற்கு தற்போது வழி இல்லாததாலேயே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

image

முதல் மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தாலும்கூட, அங்கு அவர் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என வருந்துகிறார் இந்தத் தாய். மூத்த மகள், உறவினர் வீட்டில் வராண்டாவிலும் - இளைய மகள் மருத்துவமனை படுக்கையிலும் - தானோ மண் வீட்டில் எலிகளுக்கிடையில், மழை நீர் ஒழுகும் அளவுக்கு தரமற்ற ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டை போட்ட ஒற்றை அறையிலும் கேட்பாரற்று வாழ்வதை வலியுடன் பகிறும் இந்தத் தாயிடம், ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகள் இல்லை.

தான் வசிக்கும் வீட்டை பராமரிக்கக்கூட பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால், செய்வதறியாமல் தற்போது உதவி கரங்களுக்கு ஏங்கி நிற்கிறார் மஞ்சுளா. பொருளாதார சூழலை சமாளிக்க, அடிப்படை வாழ்வாதாரத்துக்கு அரசு தரப்பில் ஏதாவது உதவி கிடைத்தால் தன் மகள்களை பராமரிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் எனும் மஞ்சுளாவுக்கு, எஞ்சி இருப்பதெல்லாம் நம்பிக்கை மட்டுமே!

- பிரசன்னா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்