ட்ரம்ப் குழுவினர் GETTR என்ற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளனர். ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் மக்கள் திரளாக இதை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து விடப்பட்ட ட்ரம்ப், சமூக வலைத்தள நிறுவனத்தை உருவாக்குவார் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை வாங்குவார் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் குழுவினர் GETTR என்ற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளனர். ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் மக்கள் திரளாக இதை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ட்ரம்பின் முன்னாள் செய்தி தொடர்பாளர் ஜேசன் மில்லர் தான், GETTR நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் ட்ரம்ப் குழுவை சேர்ந்தவர்கள். ஜூலை 4ஆம் தேதி அமெரிக்கா நேரப்படி காலை 10 மணிக்கு GETTR சமூக வலைத்தளம் முறையாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. எனினும் தற்போதே ப்ளே ஸ்டோரில் இதனை பதிவிறக்கம் செய்ய முடியும். கருத்து சுதந்திரத்தை காக்கும் நோக்கில் இந்த தளம் செயல்படும் எனக் கூறியுள்ள ஜேசன் மில்லர், தற்போதுள்ள சமூக வலைத்தளங்களுக்கு எல்லாம் இதுதான் மாற்று எனத் தெரிவித்துள்ளார்.
Getting Together என்பதன் சுருக்கமே GETTR. ஏறக்குறைய ட்விட்டரில் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். 777 எழுத்துகள் கொண்ட பதிவுகளை இட முடியும். மூன்று நிமிட வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அதே போல லைவ் ஸ்டிரீம் செய்யலாம். இதில் முக்கியமானது ட்விட்டரில் பின்தொடர்பவர்களை இந்த தளத்தில் அப்படியே இம்போர்ட் செய்து கொள்ள முடியும். விரைவில் ட்ரம்ப் இதில் அதிகாரபூர்வமாக தனது அக்கவுண்ட்டை உருவாக்குவார் எனச் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே இது ட்விட்டருக்கு மாற்றாக அமையுமா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்