தகுதிப் போட்டியில் தகுதிபெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதா? என அதிருப்தி தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியான சமீஹா பர்வீன், தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்க பதக்கங்களை பெற்று அசத்தியவர் ஆவார். இவர் போலந்து நாட்டில் இம்மாதம் 26-ம் தேதி நடக்க உள்ள உலக காது கேளாதோர் தடகளப் போட்டியில் விளையாட தேர்வானார். ஆனால் டெல்லியிலிருந்து போட்டிக்குத் தேர்வான மற்றொரு மாணவி ஒருவர் தகுதி இழந்ததால், சமீஹா பர்வீனை போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.
இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே பெண்கள் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். ஒரு பெண்ணை மட்டும் அழைத்துச் செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் போன் மூலம் தெரிவித்தனர். இதனால் சமீஹா பர்வீனும், அவரது பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாகப் பல வேதனைகளை அனுபவித்த நிலையில் போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலால் கடும் வேதனையில் இருக்கிறோம் என்றும் உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில், சொல்ல முடியாத அளவிற்கு சமீஹா பர்வீன் சிரமங்களை எதிர்கொண்டார் எனவும் சமீஹா பர்வீனின் தாய் சலாமத் கூறினார்.
இதனையடுத்து இந்திய விளையாட்டுக் கழகத்தின் இம்முடிவை எதிர்த்து சமீஹா பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தகுதிப்போட்டியில் தகுதி பெற்றும், பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவிடாமல் தடுப்பதா? என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாளைக்குள் பதில் தராவிடில் நேரடியாக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்