இஸ்ரோ அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் தொடர்ந்து முனைப்புகாட்டி வருகிறது. எடை குறைந்த செயற்கைக்கோள்களுக்கு பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டும், அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி வகையிலான ராக்கெட்டுகளில் செலுத்தி வருகிறது. ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தொடர் முயற்சியில் இதுவரை 14 ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இந்தியா விண்ணில் செலுத்தியது. அவற்றில் 2006 ஆம் ஆண்டு ஒரு முறையும், 2010 ஆம் ஆண்டில் 2 முறையும் தோல்வியுற்றது. இதன் தொடர்ச்சியாக, நான்காவது முறையாக இன்றைய முயற்சியும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஆம், புவி கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் விதமாக, இ.ஓ.எஸ். - 03 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியிருந்தது. இதை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தயாராக இருந்தன. திட்டமிட்டபடி, இன்று அதிகாலை சரியாக 5 மணி 43 நிமிடங்களுக்கு, இ.ஓ.எஸ். - 03 செயற்கைக் கோளை சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி - எஃப் 10 ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது.
ஆரஞ்சு வண்ணப் புகையை கக்கியபடியே சீறிய ராக்கெட், விஞ்ஞானிகள் கணித்திருந்த பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அப்போது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால், சில நிமிடங்களில் அந்தப் பாதையிலிருந்து ராக்கெட் விலகியது. இதனால் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.
ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன? - Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இஸ்ரோவின் 'இன்சாட்' மற்றும் 'ஜிசாட்' வகை செயற்கைக்கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் செய்கிறது. நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது.
ஜி.எஸ்.எல்.வி. உருவான கதை: ஜிசாட் (Geosynchronous satellites) செயற்கைக்கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக்கோள்களை உருவாக்ககூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க முடியவில்லை. 1990-ஆம் ஆண்டு இந்தியா தனது செயற்கைக்கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. சோவியத் யூனியன் உடைந்த பின்பு இஸ்ரோ உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.
ஏற்கெனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle) தொழில்நுட்பத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திறமையானவர்கள். ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் தர மறுத்தன. எனினும், ஏற்கெனவே இஸ்ரோ வைத்திருந்த ரஷிய எஞ்ஜின்களை வைத்து, 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 18 -ஆம் தேதி முதல் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
கிரையோஜினிக் எதனால்? - பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகளால், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக குறுகிய தூரம் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும். ஆனால், தகவல்தொடர்பு வசதிகளுக்கு செயற்கைக்கோள்களை 30,000 கி.மீ.க்கு மேல் நிலைநிறுத்தியாக வேண்டும். மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். இதற்கு ஜி.எஸ்.எல்.வி.தான் ஒரே தீர்வு. மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள்.
ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பான 30 நொடிகள் வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் நாம் சிறந்து விளங்கினால்தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு கொண்டு செல்ல முடியும் என்பதுடன், விண்கலங்களையும் செலுத்த இயலும். இப்போது அதிக எடைக்கொண்ட மாக் 3 மற்றும் மாக் 2 வகை ராக்கெட்டை வெற்றிகரமாக அனுப்பியதில், எதிர்காலத்தில் பெறும் சாதனைகளை விண்வெளி ஆராய்ச்சியில் நிகழத்த இஸ்ரோ தீர்மானித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்