Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘போட்டி நாடாளுமன்றம்’: ராகுல் முனைப்பில் ஒருங்கிணையும் எதிர்க்கட்சிகள்- உற்றுநோக்கும் பாஜக

ராகுல்காந்தி ஒருங்கிணைப்பில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கான்ஸ்டிடியூசன் கிளப்பில் ’போட்டி நாடாளுமன்றம்’ நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமை பாஜகவை கலக்கமடைய செய்துள்ளது.

எதிர்க்கட்சியினர் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி கடந்த 10 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் சூழலில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டுள்ளது. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாமல் இருந்தது, பாஜகவிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்திருப்பது பாஜக அரசுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. கடந்த காலங்களில் சோனியா காந்திதான் அனைத்துக்கட்சி கூட்டத்தை முன்னெடுப்பார். ஆனால் தற்போது ராகுல்காந்தி இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், “2014க்கு முன்புவரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டால், ஆளும் கட்சி அவர்களை அழைத்துபேசி சுமூக சூழலை உருவாக்கி அவையை நடத்த முயற்சி செய்வார்கள். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் அமளிசெய்தால் அவர்களை தவிர்த்துவிட்டு கூட்டத்தை நட்த்துகிறார்கள். தற்போது பெகாசஸ் போன்ற பெரிய பிரளயம் நடந்துள்ள சூழலில் எப்படி கூட்டத்தை முன்னெடுப்பது என ஆலோசிக்கவே இந்த கூட்டம் என்று பார்க்கிறேன்” என தெரிவித்தார்

இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்து பேசும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “ சோனியாகாந்தியின் வழிகாட்டுதலின்படிதான் ராகுல்காந்தி இந்த கூட்டத்தை முன்னெடுக்கிறார். அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்ட பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட நாடு சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக தயாராக இல்லை. அதனால்தான் இது போன்ற முடிவினை எதிர்க்கட்சிகள் எடுக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இந்த ஒருமித்த கருத்தினை உடைய எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்

image

இதுபற்றி பேசும் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன், “கோவிட் 19 தான் மத்திய அரசு சந்திக்கும் சவாலாக உள்ளது, எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு சவாலாக இல்லை. பாஜக அரசு பற்றி குறைகூற ஒன்றும் இல்லாத காரணத்தால் இப்போது இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இமாலய ஊழல்களை செய்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர், ஆனால் பாஜகவின் அரசில் ஊழல் இல்லை என்பதால்  வேறு ஏதாவது விவகாரத்தை பூதாகரமாக்குகிறார்கள். ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் எதையாவது செய்யவேண்டும் என இதை செய்கிறது” என தெரிவித்தார்

பெகாசஸ் உளவு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை உணவு விருந்துடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக வியூகங்கள் வகுக்கப்படுமென தெரிகிறது. ஆலோசனைக்கூட்டத்துக்கு பிறகு ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் சைக்கிள் பேரணியாக நாடாளுமன்றத்துக்கு சென்றனர்.

image

குறிப்பாக போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் பேசப்பட உள்ளது. இதனிடையே பா.ஜ.க எம்.பிக்களுடன் பிரதமர் மோடியும் இன்று காலை ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, “எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றன” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  இத்தனை வருடங்களாக தனித்தனியாக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள் இப்போது பெரிய அளவில் ஒருங்கிணைந்திருப்பது பாஜகவை பதட்டம் கொள்ள செய்துள்ளது என்பது உண்மை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்