Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்று வரை மன்னிப்பு கேட்காத அமெரிக்கா... ஹிரோஷிமா பேரழிவின் நினைவு தினம்

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா அணு குண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
 
ஜப்பானின் ஹேன் சூ தீவில் அமைந்துள்ள நகரம் ஹிரோஷிமா. 73 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 2 லட்சத்துக்கும் மேல் மக்களைக் கொண்ட நகரம். 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் நாள் காலை எப்போதும் போல் விடிந்தது அம்மக்களுக்கு. காலை 8.15 மணிக்கு என்ன நடக்கப் போகிறது என தெரியாமல் மக்கள் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தனர்.
 
வானில் மூன்று விமானங்கள் பறந்தன. எனோலாகே என்ற விமானம் மூலம் 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா நகரத்தின் நடுப்பகுதியில் வீசியது அமெரிக்க ராணுவம். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சப்தத்துடன் வெடித்து நகரத்தில் 2,000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் பற்றி எரிந்தன. 1 கி.மீ பரப்பிலிருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. ஹிரோஷிமாவில் இருந்த 60,000 கட்டடங்கள் சேதமடைந்தன. 1,40,000 பேர் உடனடியாய் இறந்தனர். குண்டு வெடித்த மையத்தில் 5,000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியதால் உடல்கருகி இறந்தனர். ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு வெப்பம் இருந்தது.
 
image
16 மணி நேரம் கழித்து அமெரிக்கா அணுகுண்டு வீசியதை அறிவித்தது. அதுவரை என்ன வகை குண்டு என்பதே யாருக்கும் தெரியவில்லை. குண்டு வெடித்த துயரம் அடங்கியவுடன் கதிர்வீச்சு ஆரம்பித்து. இதில் பல ஆயிரம் பேர் மாண்டனர். நகரை விட்டு தள்ளி இருந்தவர்களும் தப்பவில்லை.
 
மூன்று நாள்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது அமெரிக்கா. இந்த குண்டுவீச்சு நடந்து 6-வது நாளில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த அணுகுண்டு வீச்சுதான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.
 
இன்றுவரை ஜப்பான் மீது அணு குண்டுகள் வீசியதற்கு அமெரிக்கா மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தது இல்லை. மக்கள் வசிக்கும் பகுதியில் அணுகுண்டு வீசி இருப்பது இன்றும் போர் குற்றமாகவே கருதப்படுகிறது. இந்தப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலைப்பாடு பற்றிய பெரும் சர்ச்சை இன்றும் உலகெங்கும் தொடர்கின்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்