Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இறுதிவரை போராடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி- மைதானத்திலேயே கண்ணீர் விட்ட வீராங்கனைகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனுக்கு எதிரான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது.

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் அணி லீக் ஆட்டங்களில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவி, பின்னர் சிறப்பாக ஆடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் அரையிறுதியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினாவிடம் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில், 3ஆவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி பிரிட்டனை இன்று எதிர்கொண்டது.

முதல் கால் பகுதி

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மற்றும் பிரிட்டன் விளையாடி வருகின்றன. முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன. இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் முயற்சிகளை தடுத்தார். முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது கால்பகுதி

இந்த நிலையில்தான் இரண்டாவது கால் பகுதி விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரிட்டன் அணிக்கு முதல் கோல் வாய்ப்பாக சேம் சைட் கோல் ஆக கிடைத்தது. இந்திய வீராங்கனை செய்த தவறால் அவர்களுக்கு ஒரு கோல் கிடைத்தது. அடுத்ததாக தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினர் பிரிட்டன் வீராங்கனைகள். இதனால், பிரிட்டன் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து இரண்டாவது கால்பகுதியின் பிற்பகுதியில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தின. அடுத்தடுத்து இரண்டு பெனால்டி கோல்களை அடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து மூன்றாவதாக சூப்பர் ஷாட் மூலம் கோல் ஒன்றினையும் அடித்தனர். இரண்டாவது கால் பகுதியின் முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது கால்பகுதி

இரண்டாவது கால்பகுதியில் இந்திய அணி முன்னிலையில் இருந்த நிலையில், மூன்றாவது கால்பகுதியில் தொடக்கம் முதலே பிரிட்டன் ஆக்ரோஷமாக விளையாடியது. அந்த அணியின் பெரும்பாலான முயற்சிகளை இந்திய கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். இருப்பினும், மூன்றாவது கால்பகுதியில் பிரிட்டன் ஒரு கோல் அடித்து 3-3 என்று சமன் செய்தது.

நான்காவது கால்பகுதி:

இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து இருந்ததால் கூடுதலாக கோல் அடித்து முன்னிலை பெற தொடக்கம் முதலே போராடின. பிரிட்டன் அணி மூன்றாவது நிமிடத்தில் தங்களுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோல் ஆக மாற்றியது. இதனால், பிரிட்டன் 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதி நிமிடங்களில் பிரிட்டன் அணி தடுப்பாட்டம் மட்டுமே ஆடி நேரத்தை கடத்தியது. இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்திய மகளிர் அணி இறுதிவரை கடுமையாக போராடியது.

image

இந்திய அணியை தோல்வியை தழுவிய நிலையில், இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்