Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜெயலலிதா இல்லம் - மேல்முறையீடு செய்ய அனுமதி

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகபடுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

image

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் ஒருவர் குடியிருந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற சுற்றுச்சூழல் சான்றிதழ் எதுவும் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என உத்தரவிட்டார். மேலும், 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை வாரிசு தாரர்களான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ.67.95கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை வருமான வரித்துறை மேற்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

image

இதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபா மற்றும் தீபக் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயாராணியிடம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தீபக் மற்றும் தீபத்திற்கு வேதா நிலையம் இல்லத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில் 2 30 மணியளவில் போயஸ் கார்டன் இல்லம் திறக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான எப்ஃஐ.ஆர் சொல்வது என்ன? 

இதற்கிடையே, வேதா இல்லம் குறித்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என அதிமுக கூறியிருந்தது. இந்நிலையில், அதிமுக மற்றும் வேதா நிலைய நினைவில்ல அறக்கட்டளை சார்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தரப்பில் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் அரசுடைமையாக்கியதற்கு எதிரான வழக்கில் மனுதாரராக அதிமுக ஆட்சியில் இருந்தபோது இணையாதது ஏன்? என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்