Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா தாக்கம்: டிஜிட்டல் முறை பிரச்சாரத்திற்கு மாறிய கட்சிகள் - உ.பி. தேர்தல் கள நிலவரம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் நடத்த பாரதிய ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் தீவிரமாக தொழில்நுட்ப ரீதியான உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பேரணிகளுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்காளர்களை கவர உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகள் வேகமாக காய்களை நகர்த்தி வருகின்றன. 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

காணொளி மூலம் பேரணிகளை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ள தலைவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து பேசுவது போன்ற "காணொளி மேடை" அமைத்து அதன்மூலம் வாக்காளர்களை கவர நடவடிக்கை எடுக்கலாம் என அந்தக் கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் செய்த அனுபவத்தைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.

image

டிஜிட்டல் பிரச்சாரத்தில் முன்னணி வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்தப் பணிக்காக கிட்டத்தட்ட 9,000 நபர்களைக் கொண்ட "ஐடி செல்" மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தனிப்பட்ட முறையில் வாக்காளர்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சம் புதிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 100 ஃபேஸ்புக் பக்கங்கள் பயன்படுத்தப்படும் எனவும் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி 2017ஆம் வருடத்திலிருந்து சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் நடத்தி வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ள அளவு வலுவான உட்கட்டமைப்பு இல்லை என்றாலும், தனியார் ஐடி நிறுவனங்கள் மூலம் பிரச்சாரத்திற்கான எலக்ட்ரானிக் வசதிகளை தயார் செய்ய அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மற்றும் யூட்யூப் மூலம், மக்களை சென்றடைய சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதைத் தவிர கிராமப்புற பகுதிகளில் எல்இடி ஸ்கிரீன் பொருத்திய வாகனங்களைக் கொண்டு சென்று பிரச்சார வீடியோக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் குழுக்களில் வாக்காளர்களை இணைக்க வாட்ஸ்அப் லிங்க் அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே தேசிய அளவில் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதி உள்ளது என்பதால் அந்தக் காட்சி விரைவாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு காணொளிகளை வெளியிட முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரியங்கா காந்தி பேசுவது மற்றும் மகளிருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிப்பது போன்ற அம்சங்கள் இந்த காணொளிகளில் முன்னுரிமை பெறும் என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே யூடியூப், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் ஃபேஸ்புக் மூலம் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தனது நடவடிக்கைகளை டிஜிட்டல் வடிவில் வலுவாக கட்டமைத்துள்ளது என்பதால் உத்தரப்பிரதேசத்தில் அதே பாணியை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஊரகப் பகுதிகள் அதிகம் என்பதாலும் டிஜிட்டல் ஆதிக்கம் இந்த பகுதிகளில் குறைவு என்பதாலும், களத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில் வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று நேரடிப் பிரச்சாரம் நடத்த உள்ளன. இதைத் தவிர ஊடக விளம்பரங்கள் மூலமும் வாக்காளர்களை கவர விரிவான திட்டங்களை இந்த கட்சிகள் தயார் செய்துள்ளன. குறிப்பாக யோகி ஆதித்யநாத் அரசு தனது சாதனைகள் குறித்து பல்வேறு விளம்பரங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளம்பரங்களை வெளியிட பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஏற்கெனவே டிஜிட்டல் பிரச்சாரத்தில் உள்ள அனுபவம் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப ரீதியான முதலில் தங்களுடைய வலுவை காட்டி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பல சிறிய கட்சிகள் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனக் கருதுகிறார்கள். காணொளி மூலம் பேரணிகள் நடத்துவதோ, அல்லது ஜூம் மற்றும் கூகுள் மீட் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதோ தங்களுக்கு பரிச்சயம் இல்லை என்பது அவர்களுடைய புகார். ஆகவே தனியார் நிறுவனங்களை அணுகி சமூக வலைத்தளங்கள் மூலம் டிஜிட்டல் பிரச்சாரங்களை நடத்த சிறிய கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

- கணபதி சுப்ரமணியம்

இதையும் படிக்க: மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தொடர்பான FSSAI வரைவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: காரணம் என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்