வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ள விளையாட்டு உலகின் திருவிழா என போற்றப்படும் ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் ஆரம்பமாக உள்ளது. மொத்தம் 117 வீரர்கள் 18 வகையிலான விளையாட்டில் விளையாட உள்ளனர். அதில் ஒருவர்தான் தமிழ்நாட்டை சேர்ந்த சத்யன் ஞானசேகரன். இந்தியாவுக்காக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இன்றைய தேதிக்கு இந்தியாவின் சிறந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்.
யார் இவர்?
28 வயதான சத்யன் பிறந்து, வளர்ந்தது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான். அவரது அப்பா ஞானசேகரன், அம்மா மலர்கொடி. வீட்டில் மூன்றாவது பிள்ளை. அவருக்கு மூத்தவர்களாக இரண்டு சகோதரிகள். பொதுவாக ஒவ்வொரு விளையாட்டு வீரரும் விளையாட்டை தங்களது கெரியராக தேர்ந்தெடுக்க ஒரு கதை இருக்கும். அப்படி ஒரு கதை சத்யனுக்கும் உண்டு. அவரது அம்மா மலர்கொடி, வேணுகோபால் சந்திரசேகரின் டேபிள் டென்னிஸ் அகாடமியில் சத்யனை பயிற்சிக்காக சேர்த்துள்ளார். அப்போது அவருக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். அங்கிருந்து தொடங்கியுள்ளது அவரது பயணம். அதிக அகாடமி அவரது வீட்டுக்கு அருகாமையில் இருந்துள்ளது.
11 வயதில் கண்ட ஒலிம்பிக் கனவு!
“ஒலிம்பிக்கில் விளையாட வேண்டுமென்பது எனது கனவு. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கை பார்த்த போது இந்தியாவுக்காக நானும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என விரும்பினேன். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். அன்று தொடங்கிய எனது கனவு சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு பலித்துள்ளது” என்கிறார் அவர்.
அந்த நிகழ்வுக்கு பிறகு தொழில்முறையாக டேபிள் டென்னிஸ் விளையாடி வந்த சத்யன், நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாட வேண்டுமென்ற கனவுடன் உழைப்பை வெளிப்படுத்தினார்.
2008 இல் தொடங்கிய வெற்றிப்பயணம்!
2008 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற இளையோர் காமன்வெல்த் விளையட்டுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியதன் மூலம் சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார் அவர். தொடந்து 2011 ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸில் அவர் இடம் பெற்ற அணி பதக்கம் வென்றது. தொடர்ந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் விளையாடும் நோக்கில் பயிற்சி செய்து கொண்டிருந்த அவரை தடம் புரள செய்தது அவரது தந்தையின் மரண செய்தி.
பிறகு அதிலிருந்து மீண்ட அவருக்கு சர்வதேச அளவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது 2016 பெல்ஜியம் ஓபன் தொடரின் டைட்டிலில் கிடைத்த வெற்றி. தொடர்ந்து 2017இல் ஸ்பேனிஷ் ஓபன் வெற்றி, 2018 காமன் வெல்த் விளையாட்டில் மூன்று பதக்கம், அந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கிடைத்த வெண்கலம், 2019 இல் சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடேரேஷன் நடத்திய இரண்டு தொடர்களில் பதக்கம், 2020 ஹங்கேரியில் இரட்டையர் பிரிவில் வெள்ளி என வெற்றி மீது வெற்றிகளை குவித்தார்.
தொடர்ந்து கொரோனா காரணமாக விளையாட்டு உலகம் ஸ்தம்பித்து நிற்க டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளில் கலந்து கொண்டார். போலாந்து, கத்தார் மற்றும் ஜப்பான் மாதிரியான நாடுகளில் நடைபெற்ற லீக்கில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். அந்த அனுபவம் அவருக்கு நிச்சயம் ஒலிம்பிக்கில் கை கொடுக்கலாம்.
கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளதாக சத்யன் ஞானசேகரன் தெரிவித்திருந்தார். அவரது உழைப்புக்கான ஊதியத்தை நிச்சயம் டோக்கியோவில் பெறுவார் என நம்புவோம். சர்வதேச டேபிள் டென்னிஸ் ரேங்கிங்கில் அவர் 37வது இடத்தில் தற்போது உள்ளார்.
கலக்குங்க சத்யன் ஞானசேகரன்...
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்