Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆக்ரோஷமான காட்டு யானை சொல்பேச்சு கேட்கும் வளர்ப்பு யானையாக மாற்றப்படுவது எப்படி?

காட்டுக்கே ராஜாவாக வலம் வரும் யானை சில நேரங்களில் ஊருக்குள் புகும், தன் உணவுக்காக அட்டகாசம் செய்யும். பல நேரங்களில் வனத்துறையினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த யானை மீண்டும் காட்டுக்குள் செல்வதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் காட்டில் இருக்கும் யானைகள் வழித்தடம் மனிதனால் ஆக்கிரமிக்கப்படுவது முக்கியக் காரணமாகும். இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொது மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகும் சூழ்நிலையிலும், அதனை காட்டுக்குள் விரட்ட முடியாத காரணத்துக்காகவும் வனத்துறையினர் காட்டு யானைகளை பிடித்து அவற்றை வளர்ப்பு யானையாக மாற்றுகின்றனர்.

image

அண்மையில் கூட ஆக்ரோஷமான காட்டு யானையாக அச்சுறுத்திய சங்கரை, கட்டளைகளுக்கு அடிபணியும் வளர்ப்பு யானையாக மாற்றியிருக்கிறது, வனத்துறை. 2012-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பந்தலூர், சேரம்பாடி பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானை சங்கர் மக்களை அச்சுறுத்தி வந்தது. அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு முறையும் உயிரைப் பணயம் வைத்த வனத்துறை காவலர்கள், சங்கரை தொடர்ந்து கண்காணித்து விரட்டி வந்தனர். பின்பு சங்கர் பிடிக்கப்பட்டு இப்போது வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இப்போது சங்கருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வனத்துறையினர், சங்கர் யானை பிடிபடாமல் இருந்திருந்தால் அதன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர்.

image

காட்டு யானை வளர்ப்பு யானையாக எப்படி மாற்றப்படுகிறது?

ஒரு காட்டு யானையை வளர்ப்பு யானையாக மாற்றுவது, அதனை மேலாண்மை செய்வது ஆகியவை எளிதானதல்ல. அதற்கு தனித்துவமான திறனும் நிபுணத்துவமும் வேண்டும். நமது தமிழக வனத்துறையில் ஆனைமலை, முதுமலை ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம்கள் உள்ளன. பொதுவாக ஒரு காட்டு யானை வளர்ப்பு யானையாக மாற்றப்படும்போது அதற்கு சற்று கடுமையான முறையே பின்பற்றப்படுகிறது. காட்டு யானை பிடிக்கப்பட்டால் அது கரால் என்றழைக்கப்படும் மரக்கூண்டில் அடைக்கப்படுகின்றன.

அந்த கூண்டு 18 அடி உயரம், 15 அடி அகலம், 15 அடி நீளம், கொண்டது; தேக்கு, கற்பூர மரங்களால் அமைக்கப்படும். சிறை வைக்கப்பட்டிருக்கும் காட்டு யானை ஆக்ரோஷத்தால் சுற்றியுள்ள தடுப்பு மரங்களில் மோதாமல் தடுக்க, முன்னங்கால் ஒன்றும், பின்னங்கால் ஒன்றும் காயம் ஏற்படாதவாறு கயிற்றால் இறுக்கி கட்டப்படும். அவற்றை கண்காணிக்க, முதுநிலை பாகன், இரு இளநிலை பாகன்கள், 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

image

ஒரு மாதம் கழிந்ததும் பாகன்கள், கராலுக்குள் சென்று யானைக்கு உணவு வழங்குவர். அந்த யானை அவர்களுடன் பழகத்துவங்கும். இப்படியே நாளுக்கு நாள் பழக்கம் அதிகரிக்கும். பாகன்களுடன் நெருங்கிப் பழகி, கட்டளைக்கு கட்டுப்படத் துவங்கும். முழுக் கட்டுப்பாட்டில் யானை வந்ததும், கும்கிகளின் உதவியுடன் வெளியே அழைத்து வரப்பட்டு நடமாட அனுமதிக்கப்படும். நாளடைவில், இந்த யானைகளும் வளர்ப்பு யானைகளாக, கும்கி யானைகளாக மாறிவிடும். ஆக்ரோஷம் மறையும். பாகன்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இப்படி எண்ணற்ற முரட்டு காட்டு யானைகளும், வளர்ப்பு யானைகளாக மாறி உள்ளன. தமிழகத்தில் 1998-இல் முதல் முதலாக ஆட்கொல்லி யானை ஒன்று கும்கியாக மாற்றப்பட்டது. காட்டு யானைகளை வளர்ப்பு யானைகளை மாற்றுவதற்கான இத்தகைய பயிற்சிகள்தான் கொடூரமாக இருக்கிறது என்று காட்டுயிர் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தாலும் இதுதான் நடைமுறை என்பது கள எதார்த்தம்.

image

இது குறித்து தமிழக வனத்துறையில் முதுமலை, டாப் ஸ்லிப் யானைகள் முகாம்களில் பணியாற்றிய முன்னாள் வனச்சரக அலுவலர் சி.தங்ககராஜ் பன்னீர்செல்வம் கூறும்போது "காட்டு யானையை வளர்ப்பு யானைகளாக மாற்றுவதற்கு கராலில் அடைத்துதான் அதனை வழிக்கு கொண்டு வர முடியும். காலம் காலமாக இந்த வழிமுறையைதான் பின்பற்றி வருகிறோம். முகாமில் கூட யானை குட்டி போட்ட பின்பு அதனை 1 ஆண்டுதான் தாயுடன் இருக்க விடுவோம். பின்பு தாய் யானையிடம் பிரித்து கராலில் அடைத்து அதனை வளர்ப்பு யானையாக மாற்றுவோம். அதுவே பெரிய போராட்டமாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை. யானை ஒரு காட்டு விலங்கு என்பதை நாம் மறக்க கூடாது" என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்