Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விருதுநகர்: வறுமையிலும் திறமையோடு விமானம் செய்யும் பணியில் ஏழை மாணவன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நேரத்தை வீணாக்காமல், பேட்டரியில் இயங்கும் விமானத்தை தயாரித்து இளம் விஞ்ஞானியாக சாதனை படைக்கும் முயற்சியில் அம்மன்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவர் இறங்கியுள்ளார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த 17 வயது மாணவன் முத்துக்குமார். இவர், அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், விறகு வெட்டி கூலி வேலை செய்துவரும் தனது தாய் செல்வியின் வருமானத்தில் கல்வி கற்று வருகிறார்.

image

முத்துக்குமாருக்கு சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது அதிக ஆர்வம் இருந்து வருகிறது. ஒருபக்கம் வறுமை வாட்டினாலும் மறுபக்கம் எதிலாவது சாதிக்கவேண்டும் என்ற வேட்கை அவரைத் தூங்கவிடாமல் துரத்தியது. மாணவர் முத்துக்குமாருக்கு சிறுவயதிலிருந்தே பேட்டரியால் இயங்கும் ரிமோட் கார், வேன் மீது ஆர்வம் அதிகம். இதன் காரணமாக பள்ளியில் நடைபெறும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

image

இந்நிலையில் கடந்த 18 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பின்பு ஓய்வு நேரத்தை வீணடிக்காமல், கடந்த 10 மாதங்களாக வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தான் சேமித்து வைத்திருந்த 15 ஆயிரம் பணத்தை கொண்டு தனது நீண்டநாள் கனவான 6 அடி நீளம் 6 அடி அகலம் உள்ள பெரிய அளவிலான விமானத்தை வடிவமைத்துள்ளார். இந்த விமானத்தின் இருபுறமும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

image

மேலும் விமானத்தின் பக்கவாட்டு பாகங்களில் எல்இடி வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தி தற்பொழுது நகரும் வடிவில் உருவாக்கி உள்ளார். தற்போது 80 முதல் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும் இன்னும் 10 சதவீத பணிகள் நிறைவடைந்ததும் இந்த விமானம் பறக்கத் துவங்கி விடும் எனக் கூறும் இந்த மாணவன், எதிர்காலத்தில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பு படித்து விமானப் பிரிவில் பணிபுரிய வேண்டும் என்பதே தனது நீண்டநாள் கனவு எனக்கூறுகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்