Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதி - துரைமுருகன்

தமிழகத்தை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் ஷெகாவத் உறுதியளித்ததாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ''மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டிய பிரச்னைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கஜேந்திர சிங் உறுதியளித்தார். மேலும் தமிழகத்தை கேட்காமல் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
 
கர்நாடக அரசு ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டும் மற்ற மாநிலத்தின் நலனுக்கு எதிராக அணை கட்டி விட முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனியாக ஒரு நிரந்தர தலைவரை நியமிக்க கோரிக்கை வைத்துள்ளோம். தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டியது குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற தமிழகத்திற்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினோம். தமிழகத்திற்கு மாதந்தோறும் கர்நாடகா அரசு தர வேண்டிய காவிரி நீரை திறந்துவிட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மொத்தத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது'' என்று துரைமுருகன் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்