Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டி20 உலகக் கோப்பை தொடர்கள்! சாதனை துளிகள்! இந்திய அணியின் செயல்பாடு! - ஓர் பார்வை

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது 2021 எடிஷனுக்கான டி20 உலகக் கோப்பை தொடர். கொரோனா தொற்று பரவல் அபாயத்தால் இந்தியாவில் நடந்திருக்க வேண்டிய இந்த தொடர் இப்போது அயலகத்தில் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த தொடரை இந்தியா தான் நடத்துகிறது.

image

டி20 உலகக் கோப்பை வரலாறு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த 2007 முதல் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது. இதுவரையில் ஆறு முறை இந்த தொடர் நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்று வருவது ஏழாவது எடிஷன். இது வரையில் இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), வெஸ்ட் இண்டீஸ் (2012), இலங்கை (2014) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் கோப்பையை வென்றுள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 

image

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மாதிரியான அணிகள் இதுவரையில் டி20 உலகக் கோப்பையை வெல்லாமல் உள்ளன. 

டி20 உலகக் கோப்பை சாதனை துளிகள் சில!

  • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இலங்கையின் மஹிலா ஜெயவர்த்தனே உள்ளார். மொத்தம் 1016 ரன்களை அவர் எடுத்துள்ளார். 
  • பாகிஸ்தான் வீரர் ஷஹித் அஃப்ரிடி 39 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய அணிகளாக இலங்கை (35), பாகிஸ்தான் (34), இந்தியா (33) உள்ளன. 

image

  • இலங்கை அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பதிவு செய்துள்ள வெற்றியாக உள்ளது. 1 ரன் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய அணியாக தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இந்தியா உள்ளன. அதில் இந்தியா இரண்டு முறை இதை செய்துள்ளது. 2016 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோனி வங்கதேச வீரரை ரன் அவுட் செய்ததன் மூலம் கிடைத்த வெற்றியை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியாவின் அந்த இரண்டு வெற்றிகளில் இது ஒன்று. 
  • இலங்கை அணி ஒரே இன்னிங்ஸில் 260 ரன்களை பதிவு செய்துள்ளது. இது ஒரு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச ரன்களாகும். இந்தியா அதிகபட்சமாக 218 ரன்களை பதிவு செய்துள்ளது. குறைந்தபட்சமாக நெதர்லாந்து அணி 39 ரன்களை பதிவு செய்துள்ளது. 
  • இங்கிலாந்து அணி சேஸ் செய்த 230 ரங்களே ஒரு அணி டி20 உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக சேஸ் செய்த ரங்களாக உள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி டி20 உலகக் கோப்பையில் 86.33 பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார். இது ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச பேட்டிங் சராசரியாகவும் உள்ளது. அதிவேக அரைசதமாக யுவராஜ் சிங் 12 பந்துகளில் பதிவு செய்த அரை சதம் உள்ளது. அதை 2007 டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் பதிவு செய்திருந்தார்.
  • அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் உள்ளார். பவுண்டரிகள் பட்டியலில் ஜெயவர்தனே 111 பவுண்டரிகளை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
  • விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல் செய்த வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளார். அதே போல அதிக போட்டிகளில் அணியை வழிநடத்திய கேப்டனாக தோனி உள்ளார். 33 போட்டிகளில் இந்தியாவை டி20 உலகக் கோப்பையில் அவர் வழிநடத்தியுள்ளார். 

image

2021 டி20 உலகக் கோப்பை தொடர்!

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தெனாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் என 16 அணிகள் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகின்றன. மொத்தம் 45 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி, இறுதி என போட்டிகள் நடைபெறுகின்றன. 

முதல் சுற்றான குரூப் சுற்றில் ஐயர்லாந்து, நமிபியா, இலங்கை, நெதர்லாந்து, ஓமன், வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா என 8 அணிகள் விளையாடுகின்றன. A மற்றும் B என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 

மற்ற அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று நடைபெறுகிறது. 

image

கோப்பையை வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை எவ்வளவு?

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது. 

அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவும் இரண்டு அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க உள்ளது ஐசிசி. 

image

இந்திய அணி விவரம்!

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி. 

ரிசர்வ் வீரர்கள் : ஷ்ரேயஸ் ஐயர், தீபக் சாஹர், அக்சர் பட்டேல். 

இவர்களை தவிர ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, ஷபாஸ் அகமது மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் என 8 வீரர்கள் இந்திய அணியின் பயோ பபூளில் இருப்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இவர்கள் உலகக் கோப்பைக்கு தயாராகும் அணிக்கு உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

2007 சாம்பியன், 2009 குரூப் சுற்று, 2010 சூப்பர் 8, 2012 சூப்பர் 8, 2014 ரன்னர்-அப், 2016 அரையிறுதி வரை இந்தியா இதுவரையில் நடந்து முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடர்களில் செயல்பட்டுள்ளது. 

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி செயல்படுகிறார். முதல் முறையாக இந்திய அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செயல்படுகிறார். 

கோப்பை வெல்வது முக்கியம் என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் தோனியை வழிகாட்டியாக நியமித்துள்ளது. அவரும் தனது பணியை சிறப்பாக செய்து இந்தியா கோப்பை வெல்ல உதவுவார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்