Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புகழஞ்சலி: நெடுமுடி வேணு - எல்லா காலத்துக்குமான மலையாள சினிமாவின் 'நாயகன்'!

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சியவர் நடிகர் நெடுமுடி வேணு. வியப்பூட்டும் அவரின் திரைப் பயணம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்

மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்கள் மலையாள சினிமாவில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது நாயகன், உறுதுணைக் கதாபாத்திரங்கள் என மலையாள சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த இளைஞர் நெடுமுடி வேணு. மம்முட்டி, மோகன்லாலுக்கு முன்பாகவே மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக முத்திரைப் பதித்தவர் வேணு.

இந்திய சினிமா சரித்திரத்தில் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் நெடுமுடி வேணு இதுவரை மலையாளம், தமிழ் மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா என்னும் மிகப்பெரிய கனவில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் முத்திரைப் பதித்த ஒரு கலைஞர். திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை என பல்கலை வித்தககராக விளங்கியவர். இதுவரை மூன்று தேசிய விருதுகள், 6 கேரள மாநில அரசு விருதுகளை வென்றுள்ள கே.வேணுகோபால் என்னும் நெடுமுடி வேணுவின் பூர்வீகம் ஆலப்புழா அருகில் உள்ள நெடுமுடி.

image

ஆசிரியராக பணியாற்றிய இவர், 'கலா கவுமுதி' என்ற மலையாள இதழில் பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். பள்ளிகளில் படிக்கும் போதே கலையில் தீவிரம் ஆர்வம் கொண்டவராக இருந்த நெடுமுடி வேணு, அந்த தாக்கத்தால் பத்திரிகையாளராக இருந்தபோதே நாடகங்களில் கலந்துகொள்வதை வழக்கமாக்கி கொண்டார்.

காவாலம் நாராயண பணிக்கர் என்ற புகழ்பெற்ற தியேட்டர் கலைஞரின் நாடகங்கள் மூலமாக மலையாள மக்களின் மனதில் நடிகராக அறிமுகமானார். இந்த காலகட்டத்தில் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் குடியேறிய நெடுமுடி வேணுவுக்கு, பிரபல இயக்குநர் அரவிந்தன் மற்றும் பிரபல நடிகர் பரத் கோபியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

இவர்களின் நட்பே நெடுமுடி வேணுவின் கலை வாழ்க்கைக்கான அடித்தளம். 1978-ல் இயக்குநர் அரவிந்தன் உடனான நெருங்கிய நட்புக் காரணமாக அவரின் 'தம்பு' படத்தில் அறிமுகம் ஆகிறார். அறிமுகப் படத்திலேயே அவரது நடிப்பு அங்கீகரிக்கப்பட பரதன், கே.ஜி.ஜார்ஜ், ஃபாசில், பத்மராஜன் போன்ற அப்போதைய மலையாள முன்னணி இயக்குநர்கள் தங்களின் படங்களில் வேணு இருப்பதை உறுதி செய்தனர். இந்த மாற்றம் விரைவாகவே மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வேணுவை மாற்றியது.

தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர் கொடுக்கும் ஆகச் சிறந்த நடிப்பும், அசைவுகளும் படம் பார்க்கும் ரசிகர்களை அவரை ஈர்க்கவைக்கும். மலையாள சினிமாவில் நெடுமுடி வேணு பணியாற்றிய ஏறக்குறைய நான்கு தசாப்தங்களில், அவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை எனலாம். 1991-ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்த 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த உறுதுணை நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றார். 'மார்கம்' படத்திற்காக சிறப்பு பிரிவிலும் தேசிய விருது அவரைத் தேடி வந்தது.

'ஒரு மினமினினின்டே நூருங்குவட்டம்', 'தேவராகம்', 'தேவாசுரம்', 'பாரதம்', 'சர்கம்', 'பெருந்தச்சன்', 'ஹிருதுபீடம்', 'ஓரிடத்தோரு பஹெல்வான்', 'மீனமாசதிலே சூரியன்', 'பஞ்சவாடி பலம்', 'மர்மரம்', 'கள்ளன் பவித்ரன்', 'ஓர்மிக்கையே', 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா', 'ஸ்படிகம்', 'மார்கம்' போன்ற நூற்றுக்கணக்கான படங்கள் நெடுமுடி வேணுவின் நடிப்பை பறைசாற்றுபவை. இந்தப் படங்கள் எல்லாம் 90-களுக்கு முன்பு வெளியானவை. 90-களுக்கு பிறகு புதுயுக நடிகர்களின் பாய்ச்சலில் முழுவதுமாக உறுதுணை நடிகராக, காமெடி நடிகராக மாறிப்போனார். அதிலும், ஃபஹத் பாசில், துல்கர் போன்ற இளம் நடிகர்களின் வருகைகளுக்கு பிறகு முழுக்க முழுக்க உறுதுனை நடிகராக ஆக்கப்பட்டார். அந்த தருணத்திலும் 'நார்த் 24 காதம்', 'சார்லி' போன்ற படங்களில் தனது முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன் என்னை நிரூபித்திருக்கிறார் வேணு.

image

நார்த் 24 காதம் படத்தில் கோபாலன் என்கிற ஓய்வுபெற்ற ஆசிரியர் கதாபாத்திரம். திருவனந்தபுரம் செல்லும் வழியில் காதல் மனைவியின் உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைக் கேட்டு மீண்டும் ஊருக்கே திரும்பும்போது, அந்த 'பந்த்' நாளில் நடக்கும் சம்பவங்களும், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை. இந்தப் படத்தின் நாயகன் பஹத் பாசில். ஆனால் அறிவிக்கப்படாத கதாநாயகன் யார் என்றால் அது நெடுமுடி வேணுதான். கதை முழுக்க அவரை சுற்றித்தான் இருக்கும். இரவில் ரயிலில் அறிமுகம் ஆகும் காட்சியில் க்ளைமாக்ஸ் வரை தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டுவிடுவார். அந்த அளவுக்கு பஹத்தை விட நெடுமுடி வேணுவே அதிகம் பேசப்பட்டார்.

இந்தப் படம் ஓர் உதாரணம்தான். இதுபோல் எண்ணற்ற படங்களில் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வேணு. தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகர். ஷங்கர் - கமல்ஹாசன் இணைந்த 'இந்தியன்' மற்றும் ஷங்கர் - விக்ரமின் 'அந்நியன்', 'சர்வம் தாள மயம்' போன்ற தமிழ் படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் வேணு.

எந்த கதாபாத்திரம் ஏற்றாலும் அதற்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கும் திறைமைகொண்ட நெடுமுடி வேணு எப்போதும் மலையாளத் திரையுலகிற்கு ஒரு சொத்து என்றால் மிகையாகாது. நாயகன், காமெடியன், உறுதுணை துணை நடிகன், வில்லன் என கடந்த 40 வருஷமாக பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார்கள், நியூ ஜென் நடிகர்கள் ஆகியோர் உடன் போட்டிபோட்டு நடித்த நெடுமுடி வேணு என்றும் எல்லா காலத்துக்குமான திரை நாயகனாக ரசிகர்கள் மனதில் நிறைத்திருப்பார்.

- மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்