Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அமெரிக்க ஜனநாயக உச்சி மாநாடு: உத்தரமேரூர் கல்வெட்டின் சிறப்புகளை பேசிய பிரதமர் மோடி

அமெரிக்கா நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில், உத்திரமேரூர் கல்வெட்டை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்கா நடத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த உச்சிமாநாட்டில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். ஜனநாயக உணர்வு எங்களின் நாகரிக நெறிமுறைகளில் ஒருங்கிணைந்ததாகும்.

லிச்சாவி, சாக்யா போன்ற நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசுகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மலர்ந்துள்ளன. இதே ஜனநாயக உணர்வை 10-ம் நூற்றாண்டின் "உத்தரமேரூர்" கல்வெட்டில் காண்கிறோம். இது ஜனநாயகப் பங்களிப்பின் கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இந்த ஜனநாயக உணர்வும், நெறிமுறைகளும் பண்டைக்கால இந்தியாவை மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியிருந்தது.

பல நூற்றாண்டுகால காலனி ஆட்சியால் இந்திய மக்களின் ஜனநாயக உணர்வுகளை நசுக்க முடியவில்லை. இந்தியாவின் சுதந்திரத்தின் மூலம் அதன் முழுமையான வெளிப்பாட்டை மீண்டும் காண முடிந்தது. கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக தேசக்கட்டமைப்பில் ஒப்பில்லாத நிலைக்கு அது வழிவகுத்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத சமூக- பொருளாதார உள்ளடக்கமாக அந்த செய்தி இருக்கிறது.

சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் நிலையான முன்னேற்றங்களும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மக்களின் நல்வாழ்வு நடைமுறையாகவும் அது இருக்கிறது. இந்தியாவின் நிலை உலகுக்கு ஒரு தெளிவான செய்தியைத் தருகிறது. ஜனநாயகம் பயன்தர முடியும், ஜனநாயகம் பயன்தந்துள்ளது, ஜனநாயகம் தொடர்ந்து பயன் அளிக்கும்.

image

பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தல்கள், சுதந்திரமான நீதித்துறை, சுதந்திரமான ஊடகம் போன்ற கட்டமைப்பு அம்சங்கள்  ஜனநாயகத்தின் முக்கியமான தகுதிகளாக இருக்கின்றன. இருப்பினும் ஜனநாயகத்தின் அடிப்படை பலம் அதன் உணர்விலும், நெறிமுறைகளிலும் உள்ளது. இவை நமது குடிமக்களிடமும், நமது சமூகங்களிலும் உறைந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்கள், மக்களால், மக்களுக்காக என்பது மட்டுமின்றி, மக்களுடன், மக்களுக்குள் என்பதாகவும் இருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதிகள் ஜனநாயக வளர்ச்சியின் பல்வேறு பாதைகளைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொன்றிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். நமது ஜனநாயக நடைமுறைகளையும், செயல்முறைகளையும் நாம் அனைவரும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது.  அனைவரையும் உட்படுத்துவது, வெளிப்படைத் தன்மை, மனிதர்களின் கௌரவம், மக்கள் குறைகளைத் தீர்ப்பது, அதிகாரத்தைப் பரவலாக்குவது போன்றவற்றைத் தொடர்ந்து நாம் அனைவரும் விரிவாக்க வேண்டிய தேவை உள்ளது.

image

இந்தச் சூழலில் இன்றைய உச்சிமாநாடு ஜனநாயகங்களுக்கிடையே கூடுதல் ஒத்துழைப்புக்கு உரியகால நிகழ்வாக அமைந்துள்ளது.  சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவது, நவீன டிஜிட்டல் தீர்வுகள் மூலம் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும்  வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. சமூக ஊடகம், க்ரிப்டோ கரன்சி போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய விதிமுறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்தை சீரழிக்காமல் வலுப்படுத்த உதவும்.

ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் நமது குடிமக்களின் பெருவிருப்பங்களை ஜனநாயகங்கள் நிறைவேற்ற முடியும். மனிதகுலத்தின் ஜனநாயக உணர்வைக் கொண்டாட முடியும். இந்த மதிப்புமிகு முயற்சியில் சக ஜனநாயகங்களுடன் இணைந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது” என தெரிவித்திருந்தார்.

இதனைப்படிக்க...பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்